சென்னை: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் கூட விடுபடாத வகையில் திமுக நிர்வாகிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், “தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணியின் (SIR) காரணமாக சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்வு மற்றும் இறப்பு போன்ற காரணங்களால் நீக்கப்பட்ட இந்த லட்சக்கணக்கான பெயர்களில், நமது கட்சியின் ஆதரவு வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டுள்ளனரா என்பதை வீடு வீடாகச் சென்று சரிபார்க்க வேண்டும். புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களைப் பட்டியலில் இணைக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரையும் பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார். நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் முறையற்ற நீக்கங்கள் ஏதேனும் இருந்தால், அது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், களப்பணியாளர்கள் ‘என் பூத் – என் வெற்றி’ என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக மகளிரணி மாநாட்டைச் சிறப்பான முறையில் நடத்தி, தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும் எனவும் அவர் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
