நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய பேரணியை, ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி, நியூசிலாந்து பழங்குடியினரான மாவோரி மக்களின் பாரம்பரிய ‘ஹக்கா’ நடனத்தை ஆடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

“இது எங்கள் நாடு, இது இந்தியா அல்ல” என்று முழக்கமிட்ட அவர்கள், நியூசிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு என்றும், அங்கு பிற மதங்களின் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய கிறிஸ்தவ மதத் தலைவர் பிரையன் தமாகி, இது வெறுப்புணர்வு அல்ல என்றும், தங்கள் நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சவால் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் இடையூறு செய்த போதிலும், சீக்கியர்களின் பேரணி எவ்விதப் பாதிப்பும் இன்றி அமைதியாக நடைபெற்றதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.