திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மேட்ரிமோனியில் வரன் தேடியுள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர், தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் கூறி அந்தப் பெண்ணை வலைவீசிப் பிடித்துள்ளார்.

தொழில் தொடங்கப் பணம் தேவை எனக் கூறி, அந்தப் பெண்ணிடமிருந்து சிறுகச் சிறுக ரூ.10 லட்சம் பணம் மற்றும் 2.5 பவுன் நகையைப் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்று அவரைத் திருமண ஆசை காட்டி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துவிட்டு, ஏமாற்றித் தப்பியோடியுள்ளார்.

பணம் மற்றும் நகையைத் திருப்பிக் கேட்ட அந்தப் பெண்ணை, அந்த வாலிபரும் அவரது பெற்றோரும் சேர்ந்து ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும், இதேபோல் மற்றொரு பெண்ணை ஏமாற்றிய வழக்கும் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைவரிசை காட்டுவதையே தொழிலாகக் கொண்ட அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.