ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த சிம்மாசலம் என்பவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, கணவன் – மனைவி இருவரும் ரயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்ததாகத் தெரிகிறது. ரயில் புவனகிரி அருகே உள்ள வங்கபள்ளி நிலையத்தைக் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவரும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த புதுமணத் தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
