துருக்கியின் இஸ்மிர் (Izmir) பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர், கடுமையான குளிரைத் தாங்க முடியாமல் அங்கேயே தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அப்போது, நெருப்பிற்கு மிக அருகில் முதுகைக் காட்டியபடி அவர் நின்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றிக்கொண்டது.

அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தன் உடலில் தீப்பிடித்து எரிவது கூடத் தெரியாமல் அவர் சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு முதுகில் வெப்பம் ஏறுவதை உணர்ந்து திகைத்த அந்தத் தொழிலாளி, அலறியடித்துக்கொண்டு ஓடினார். உடனடியாகப் புத்திசாலித்தனமாகத் தரையில் படுத்து உருண்டு, போராடித் தீயை அணைத்தார்.

சில நொடிக் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டாலும், அவருக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தக் கோரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, நெருப்பிற்கு அருகில் இருக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் எனப் பலரையும் எச்சரிக்கையடையச் செய்துள்ளது.