தைவானைச் சேர்ந்த வேய் என்பவருக்கும், ஆசிரியை ஜி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வேய், கடந்த 2023 நவம்பர் மாதம் அவரது செல்போனைச் சோதித்தபோது அதிர்ச்சியடைந்தார்.

ஜி பணியாற்றும் அதே பள்ளியில் அக்கவுண்டிங் இயக்குநராக இருக்கும் யாங்க் என்பவருடன் ஜி நெருக்கமான உறவில் இருப்பதும், இருவரும் கணவன்-மனைவி போலத் தாங்கள் இருந்த அந்தரங்கத் தருணங்களை மெசேஜில் பகிர்ந்து கொண்டதும் அம்பலமானது.

இந்த விவகாரத்தால் மனமுடைந்த கணவர் வேய், தனது குடும்ப வாழ்க்கையைச் சீரழித்த யாங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காகவும், திருமண சட்டத்தை மீறியதற்காகவும் சுமார் ரூ.99.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேய் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணையின் போது, “ஜி-க்குத் திருமணமாகி இருந்தது எனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் பழகியிருக்க மாட்டேன்” என்று யாங்க் மழுப்பலான வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், யாங்கின் வருமானம் வேய்யை விட அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், வேய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது.

இறுதியில், பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.37 லட்சத்தை இழப்பீடாக யாங்க் வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக யாங்க் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.