புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், சில காட்சிகள் பார்ப்பவர்களை நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பனிப்பொழிவு, உறைபனி குளிர், வெள்ளை போர்வை போர்த்திய மலைகள் எனப் பார்த்தால் அது சுவிட்சர்லாந்து அல்லது ஐரோப்பிய நாடுகள் என நினைக்கத் தோன்றும். ஆனால், தற்போது வைரலாகி வரும் இந்தக் காட்சிகள் சவிட்சர்லாந்திலிருந்து அல்ல; சவுதி அரேபியாவின் சுட்டெரிக்கும் பாலைவனப் பகுதிகளிலிருந்து வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்த சமூக ஊடக பயனர்கள், இவை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தில் பிளவுபட்டனர். ஆனால், இது டிஜிட்டல் கற்பனை அல்ல; இயற்கை தந்த ஒரு அபூர்வ அதிசயம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, சவுதி அரேபியாவின் தபுக் மற்றும் ட்ரோஜெனா உயர்நிலப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சவுதி கெஜட் வெளியிட்ட தகவலின்படி, புதன்கிழமை தபுக் பகுதியில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மலைத்தொடரில் கனமழையுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டது.

 

இதனால், அந்த பகுதியின் கரடுமுரடான மலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டு, காட்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக மாறின. அங்கு வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிப்பொழிவுடன் அடர்ந்த மூடுபனி மற்றும் பலத்த காற்றும் அந்தப் பகுதியை சூழ்ந்துள்ளது. இந்த காட்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் ஒருவர், “பாலைவனத்தில் பனியை நம்புவது கடினம்” என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், சவுதி அரேபியாவின் மலைப்பகுதிகள் தற்போது வெள்ளை நிற போர்வை போர்த்தியுள்ளன என்பது உண்மை என அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.

 

இதற்கிடையில், சவுதி அரேபியா வானிலை ஆய்வு மையம், தபுக் மட்டுமின்றி காசிம், ஹைல் மற்றும் வடக்கு ரியாத் பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் திடீர் வெள்ள அபாயமும் உள்ளதால், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அபூர்வமான வானிலை மாற்றம், உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.