கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழவிருந்த பயணி ஒருவரை, அங்கு பணியிலிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் 13, 2025 அன்று மைசூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் ரயில் எண் 16219 பாண்டவபுரா நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியது.

 

அப்போது சிவராஜு கட்டேரி என்ற 55 வயது பயணி, ரயில் நகரத் தொடங்கியதைக் கண்டு பதற்றத்துடன் அதில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பிடி நழுவி அவர் கீழே விழச் சென்றபோது, நடைமேடையில் கண்காணிப்பில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் அபிஜீத் சிங், நொடிப் பொழுதில் ஓடிச் சென்று அந்தப் பயணியைப் பிடித்துப் பின்னோக்கி இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.

இந்தத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை குறித்த சிசிடிவி காட்சிகளை தென்மேற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆபத்தான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் செயல்பட்ட அபிஜீத் சிங்கின் கடமை உணர்வையும் துணிச்சலையும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

“யமனிடம் இருந்து மீட்கப்பட்ட தருணம்” என்று நெட்டிசன்கள் இதனை வர்ணித்து வரும் நிலையில், ஓடும் ரயிலில் ஏறுவதோ அல்லது இறங்குவதோ உயிருக்கே ஆபத்தானது என்றும், பயணிகள் ரயில்வே பாதுகாப்பு விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துரிதமாகச் செயல்பட்டு ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் அபிஜீத் சிங்கிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.