சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், யுகேஜி (UKG) படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக ‘ஏஞ்சல்’ உடையில் மிகவும் ஆசையோடு சிறுமி பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​கண்ணே கருத்தே என வளர்த்த மகள், தேவதை உடையில் பள்ளிக்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே சடலமாகத் திரும்பியதைக் கண்டு பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய பள்ளி விழா, ஒரு பிஞ்சு உயிரின் மறைவால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.