ஆந்திர மாநிலம் விஜயவாடா, கொத்தப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டாடாஜி (49). இவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மது வாங்குவதற்காக ரூ.10 தருமாறு கேட்டுள்ளான்.
இதற்கு டாடாஜி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாடாஜியை சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பி ஓடினான். இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த டாடாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண 10 ரூபாய் பணத்திற்காக முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
