கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (Laptop) வழங்கும் விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டே மடிக்கணினி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைப்பதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி அல்ல, அவருடைய ‘டெல்லி ஓனர்’ நினைத்தாலும் முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மடிக்கணினிகள் வழங்கப்படுவதற்கு முன்பே அதில் தரம் இல்லை என்று குறை கூறுவது, எப்படியாவது இந்தத் திட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற இபிஎஸ்-ஸின் எண்ணத்தையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார். திமுக அரசு வழங்கவுள்ள மடிக்கணினிகள் அதிவேக பிராசஸர் மற்றும் Windows 11 மென்பொருள் கொண்ட உயர்தரமானவை என்று உறுதி அளித்துள்ள உதயநிதி, ஒரு சிறப்பான கூடுதல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, 6 மாத காலத்திற்கு ‘Perplexity Pro AI’ வசதி இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் பாதியிலேயே கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை தற்போது திராவிட மாடல் அரசு புதுப்பொலிவுடன் செயல்படுத்த உள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
