கேரளாவில் கடந்த பதின்மூன்றாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் சிபிஎம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 1300 உள்ளாட்சி அமைப்புகளில் 23576 உறுப்பினர்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி 70682 உறுப்பினர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிபிஎம் கட்சி 7301 உறுப்பினர்களை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில், நான்கு மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், சிபிஎம் கூட்டணி ஒரு மாநகராட்சியையும், பாஜக ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இந்தத் தேர்தலில் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், சிபிஎம் கட்சிக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி அதன் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம் எம் மணி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த அக்டோபர் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘அதிதீவிர வறுமை இல்லாத கேரளா’ என்ற திட்டத்தை அறிவித்தார்.
மேலும், முதியோர் ஓய்வூதியத்தை ஆயிரத்து அறுநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்துவது, முதியோர் ஓய்வூதியம் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெண்கள் பாதுகாப்பு ஓய்வூதியம், மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி போன்ற பல தாராளத் திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இவ்வளவு தாராளத் திட்டங்களை அறிவித்த பின்னரும், தேர்தலில் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த எம் எம் மணி, “சமூக ஓய்வூதியம் போன்றவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிட்டு, மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்து நன்றி மறந்துவிட்டனர். கேரள வரலாற்றில் இத்தகைய வளர்ச்சிப் பணிகள் நடந்ததில்லை. நன்றாகச் சாப்பிட்டவர்கள் அதற்கேற்பச் செய்துவிட்டனர்” என்று பேசினார்.
ஆனால், இந்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது நிலைப்பாட்டை மாற்றிய அவர், “நான் அப்படி கூறியது சரியானது அல்ல” என வருத்தம் தெரிவித்தார்.
