ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு தமிழகத்தில் பொதுவெளியில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தக் கூட்டத்தின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ஈரோடு காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளைவிட அதிகமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கூட்டத்தில் 40 சிசிடிவி கேமிராக்கள், 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் மற்றும் முழு மருத்துவ உபகரணங்கள் தயாராக இருக்கும் என்றும் கூறினார். மேலும், 20 தண்ணீர் தொட்டிகள், அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் விநியோகம், கழிப்பறை வசதிகள், 80 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம், 14 நுழைவு/வெளியேறும் வாயில்கள் எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.