தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர்.
அவர்களை, நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் பெற்று வேலைக்குச் சேர்த்த முகமது மஹ்புல் ஹுசைன் (27), தம்பதியை மிரட்டியுள்ளார். நேற்று ஆட்டோவில் திருநெல்வேலி சென்ற தம்பதியை, சிவந்திபட்டி அருகே வழிமறித்த முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு சிறுவர்கள், அவர்கள் பணம் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரிடம் கூறி, காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு கணவர் கண் எதிரிலேயே அஸ்ஸாம் பெண்ணை முகமது மஹ்புல் ஹுசைன் உள்ளிட்ட மூவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல மணி நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
