கென்யாவின் சாவு தேசியப் பூங்காவில் ராட்சத யானை ஒன்றின் துதிக்கையில் அதன் சொந்தத் தந்தமே குத்தப்பட்டு, அதனால் சுவாசிக்கவோ, உணவு உண்ணவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ முடியாமல் தவித்த ஒரு அரிய மற்றும் துயரமான வனவிலங்கு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அசாதாரண காயம், தனது வலது தந்தத்தால் இடது நாசியைத் துழாவ முயன்றபோது நிலை தடுமாறியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துயரமான நிலையில் அந்த யானை குறைந்தது மூன்று நாட்களாகத் சிக்கித் தவித்துள்ளது. நல்ல வேளையாக, தகவல் கிடைத்தவுடன் ஸ்வாட் மற்றும் கென்யா வனவிலங்குச் சேவை அமைப்பின் நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கவனமாகத் துதிக்கையில் சிக்கியிருந்த தந்தத்தைப் பிரித்தெடுத்து, காயத்தை சுத்தம் செய்து சிகிச்சை அளித்தனர். யானையின் காயம் தீவிரமானதாக இருந்தாலும், அது காலப்போக்கில் குணமாகும் என்றும், யானை முழுமையாக மீண்டு வரும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
View this post on Instagram
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால், யானை மீண்டும் தனது காலில் எழுந்து, தந்தம் மற்றும் துதிக்கை சாதாரணமாகச் செயல்படுவதை உறுதி செய்த பிறகு அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
