திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த இலக்கு தமிழ்நாடு” என கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட சவால் என குறிப்பிட்டார். அந்த சவால்களை எதிர்கொள்ள திமுகவின் கருப்பு–சிவப்பு படையும், இளைஞர் அணியும் களத்தில் இருக்கும் என்றார்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கவே திமுக உருவானது என்றும், ஆட்சி அதிகாரத்திற்காக மட்டும் தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா கருப்பு–சிவப்பு கொடியை ஏற்றிய நாளிலிருந்து, தமிழ்நாட்டை காக்கும் போர்வரிசையில் திமுக முன்னணியில் இருப்பதாக கூறினார். எதிரிகள் காலம் காலமாக மாறியிருக்கலாம்; ஆனால் திமுகவின் கொள்கையும் போராட்டமும் மாறவில்லை என்றும், “தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்” தான் என்றார்.
தமிழ்நாட்டை சுற்றி பாதுகாப்பாக நிற்கும் பெரியாரின் கொள்கை நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது என்றும், அந்த கொள்கையின் வாரிசான முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் பாஜக எனும் “மதப்பிடித்த யானையை” அடக்கும் அங்குசம் என்றும் அவர் விமர்சித்தார். இது பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்றாகத் தெரியும் என்பதால், நேரடியாக வெல்ல முடியாது என பழைய மற்றும் புதிய கூட்டாளிகளை ஒன்றிணைத்து பாஜக முயற்சிக்கிறது என்றார்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரி துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், அதனை நம்பியே அதிமுக தேர்தல் களத்திற்கு வந்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால் திமுக மக்களையும் தொண்டர்களையும் மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளது என்றும், அந்த மக்கள் ஆதரவு தொடரும் என்ற உறுதியும் உள்ளதாக தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியதற்கு பதிலளித்த அவர், “இன்ஜின் இல்லாத காரை எவ்வளவு தள்ளினாலும் அது ஓடாது; அதிமுக இன்று அந்த நிலைமையில்தான் உள்ளது” என விமர்சித்தார். முதலில் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அதிமுகவில் இருந்து பலர் வெளியேறி வரும் நிலையில், “நான்தான் நிரந்தர பொதுச் செயலாளர்” என எடப்பாடி பழனிசாமி கூறுவதை சுட்டிக்காட்டிய உதயநிதி, அது அவர்களுக்கு மட்டுமல்ல; திமுகவிற்கும் தேவை என குறிப்பிட்டார்.
அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை விட, சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழ்வதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் என்றும், பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் ஒரே இயக்கம் திமுக தான் என்ற நம்பிக்கை மக்களிடம் வலுவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இடையில் யார் வந்தாலும், யார் சென்றாலும் திமுகவிற்கு கவலை இல்லை என்றும் கூறினார். “வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள்; ஆனால் அது நிரந்தரம் அல்ல. உதய சூரியன் மட்டுமே நிரந்தரம்” என உரையை நிறைவு செய்தார்.
