ஆந்திர மாநிலம், கசிம் கோட்டா மண்டலம் கொத்தபள்ளி பகுதியில் கடந்த 9-ம் தேதி சாலையோரம் மீட்கப்பட்ட ஆண் சடலம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சடலமாக மீட்கப்பட்டவர் 54 வயதுடைய குர்ரு நாராயணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.
அவரது உடலில் இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளை வலுப்படுத்திய நிலையில், விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், நாராயணமூர்த்தி பெயரில் 6 மாதங்களுக்கு முன் பல்வேறு நிறுவனங்களில் ரூ.1.08 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இந்த இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக, மாமனார் நாராயணமூர்த்தியை அவரது மருமகன் சுங்கரி அன்னவரம் மற்றும் பேரன் சுங்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் திட்டமிட்டு இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து, அதை சாலை விபத்தாக சித்தரிக்க முயன்றது அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக, கொலையைத் திட்டமிட்ட இன்சூரன்ஸ் பாலிசி முகவர் பீமுனி நானாஜி, கொலையைச் செய்த மருமகன், பேரன் மற்றும் உடந்தையாக இருந்த தாத்தாஜி உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
