திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே உள்ள நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகாளி (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் மர்மச் சாவாக வழக்குப் பதிவு செய்த போலிசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, சின்னகாளியின் இளைய மகள் கீதா (22) முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே, போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கீதா தனது கணவரான சிதம்பரத்துடன் (32) சேர்ந்து தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சின்னகாளிக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தின் பட்டாவைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொடுக்கச் சொல்லி, கீதாவும் சிதம்பரமும் கேட்டுள்ளனர். சின்னகாளி மறுக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. நிலத்துக்காகத் தாயை மகளே கணவருடன் சேர்ந்து கொலை செய்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.