சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிப் பிரபலமான ‘கிரிங்கிஸ்தான்’ என்ற உள்ளடக்கப் படைப்பாளரான ஆர்யன் தேவ் நீக்ரா, நேரடி ஒளிபரப்பில் ‘கௌ ரக்ஷக் தளம்’ உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதால், நேற்று, அதாவது டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் அந்த அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளானார். நேரடி ஒளிபரப்பின்போது, கௌ ரக்ஷக் தளத்தைச் சேர்ந்தவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன், “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர்களுக்கு வெளிப்படையாகச் சவால் விடுத்திருந்தார்.

 

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலான சில நிமிடங்களிலேயே, அவரது சவாலை ஏற்றுக்கொண்ட கௌ ரக்ஷக் தள உறுப்பினர்கள் நீக்ராவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு நீக்ராவைச் சுற்றி வளைத்து, கன்னத்தில் அறைந்து, தாக்கி, பொது மன்னிப்புக் கேட்குமாறு வற்புறுத்தி, வேண்டுமென்றே கேமரா முன்னிலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலின்போது, நீக்ரா தனது கருத்து ‘ஒரு வேடிக்கைக்காக’ச் சொல்லப்பட்டது என்றும், அதைக் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார். இந்தக் காணொளி இணையத்தில் பரவி வரும் நிலையில், கிரிங்கிஸ்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அவமதிப்பு அல்லது ஆன்லைன் கருத்துகளுக்கான தீர்ப்பை நீதிமன்றமே வழங்கும், தடியடி அல்ல.

இது ‘நீதி’ அல்ல, காட்டுமிராண்டித்தனமான வன்முறை’ என்று பதிவிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.