கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மோட்டார் வாகனங்களை வைத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை கிராமங்களிலும், நகரங்களிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வைத்திருப்பதைப் பொறுத்தவரை, ஏழை மக்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வருவது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் மேல்தட்டில் உள்ளவர்கள் மத்தியில் மோட்டார் வாகன உரிமை 38.2% இலிருந்து 69.7% ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் கீழ்த்தட்டில் உள்ளவர்களில் 2011-2012இல் 6.2% பேர் மட்டுமே வாகனம் வைத்திருந்த நிலையில், தற்போது 47.1% பேர் வைத்திருக்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் இதே வளர்ச்சி காணப்படுகிறது; கீழ்த்தட்டில் உள்ளவர்கள் மத்தியில் வாகன உரிமை 19.7% இலிருந்து 60.4% ஆக உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் ஏழை மக்கள் அதிகம் வாகனம் வைத்திருக்கும் மாநிலங்களில் பஞ்சாப் (76.6%), கர்நாடகா (69.1%) ஆகியவை முன்னிலையில் உள்ளன. இது இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
