தமிழக அரசியல் களத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையிலான கூட்டணி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகியுள்ள சூழலில், இரு கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை கூட்டணிக்குள் குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏதும் இல்லை. இதற்கிடையில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. எந்த கூட்டணியில் இணையப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியாகவே இருந்து வருகிறது.

நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை கூட்டணி முடிவு இன்னும் அறிவிக்கப்படாததால், விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமையுமா அல்லது அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. எனவே, தற்போது கூட்டணி என கூற முடியாது. எங்கள் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். மேலும், கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்ற கேள்விக்கு, “234 சட்டமன்றத் தொகுதிகளுமே எங்கள் இலக்குதான்” என்று பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்