சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நீண்ட காலமாக இருந்து வந்த சீனா, மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ‘ஒரு குழந்தை கொள்கை’யை கடைப்பிடித்தது. இக்கொள்கையின்படி, தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதுடன், அதற்கு மீறி குழந்தைகள் பெற்றவர்களுக்கு அரசுச் சலுகைகள் மறுக்கப்பட்டும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.
பின்னர், 2015-ம் ஆண்டு முதல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்ததால், 2021-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு அறிவித்து, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் உதவித் தொகைகளை வழங்கியது. ஆனால், இத்திட்டங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. ஆண்டுதோறும் குழந்தை பிறப்பு விகிதம் மேலும் குறைந்துவருவதால், சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் புதிய மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) திட்டம் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய வரிச் சட்டத்தின் படி, கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்பொருட்களுக்கு சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக் கூட்டப்பட்ட வரி விதிக்கப்படும்.
இதனால், கருத்தடைச் சாதனங்களின் விலை உயரும் நிலையில், இது திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிக்க காரணமாக அமையலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. ‘ஆணுறை விலை உயர்ந்தாலும், அதைவிட குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு பல மடங்கு அதிகம்’ என பலர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்ததன் விளைவாக, 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, சீனாவை முந்தியுள்ளது.
