கும்பகோணம் அருகே கொரியர் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்த புகழேந்தி (31) என்பவர், டெலிவரிக்காகச் சென்ற இடத்தில், பிரபல ரவுடி சிபி சக்கரவர்த்தியின் மனைவியைப் பார்த்து, அவருக்கு வாட்ஸ்அப்பில் காதல் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சிபி சக்கரவர்த்தி, தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து புகழேந்தியைப் பழிவாங்கத் திட்டமிட்டார். டிசம்பர் 8-ஆம் தேதி புகழேந்தியை வழிமறித்து கடத்திச் சென்ற அந்தக் கும்பல், அவரை ஒரு தென்னை மரத்தில் கட்டி வைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த புகழேந்தி, ஆரம்பத்தில் பயத்தின் காரணமாக விபத்து என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், உடல்நிலை மோசமாகி ரத்த வாந்தி எடுத்ததால், உறவினர்கள் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ரவுடி சிபி சக்கரவர்த்தி உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
