சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் இணைப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதன் மூலம், ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க ஈபிஎஸ் தயாராக இல்லை என்றே தெரிகிறது. அதேசமயம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய ஓபிஎஸ், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க டிசம்பர் 15 வரை கெடு விதிப்பதாகவும், இல்லையேல் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’வை ‘தொண்டர் உரிமை கழகமாக’ மாற்றி புதிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனால், சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவே அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என்று ஈபிஎஸ் மறைமுகமாகப் பேசியது, ஓபிஎஸ்ஸைச் சேர்ப்பதில் அவருக்கு இன்னும் விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் திடீரென டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்தித்ததாலும், பின்னர் ‘புதிய கட்சி தொடங்குகிறேன் என்று எப்போது சொன்னேன்?’ என்று கேள்வி எழுப்பியதாலும், அவர் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால், ஈபிஎஸ்ஸின் இந்த நிலைப்பாட்டிற்குப் பிறகு, ஓபிஎஸ் தரப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை பயணம் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அமித்ஷாவின் பயணம் முடிவடைந்த பின்னரே, தங்கள் அடுத்தகட்ட முடிவை எடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார், அதே சமயம் தேர்தல் பணிகளைச் சுறுசுறுப்பாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.