மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம், மாஹூர் தாலுக்காவில் உள்ள ஷேகாப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஜில்லா பரிஷத் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வந்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் வெட்கக்கேடான ஒன்றாகும். அனந்த் வர்மா என்ற அந்தப் பள்ளி ஆசிரியர், தினமும் பள்ளிக்கு குடித்துவிட்டு வருவதாகவும், பாடம் நடத்துவதற்குப் பதிலாக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களைத் திட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆசிரியரின் இந்தச் செயலால் பல நாட்களாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இந்த விவகாரத்தைக் குறித்துத் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்தபோது, அந்த ஆசிரியர் அதிக போதையில் இருந்துள்ளார். மேலும், பெற்றோர்கள் முன்னிலையிலேயே நடனம் ஆடி கீழே விழுந்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் முழுவதையும் பெற்றோர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். ஆசிரியரின் இந்தப் பொறுப்பற்ற செயலால் கிராம மக்களிடையே கோபம் பரவியது. ஆசிரியர்களே இப்படி இருந்தால் வருங்கால தலைமுறைக்கு என்ன கல்வி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பிய பெற்றோர்கள், ஜில்லா பரிஷத் கல்வித் துறையிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட ஜில்லா பரிஷத் கல்வி நிர்வாகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் ஆசிரியரின் நடத்தை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கல்வித் துறை உடனடியாக அனந்த் வர்மாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.