ஆந்திர மாநிலத்தில், தனது 13 வயது மகனை இழந்த பெற்றோர், அவரது நினைவாக ரூ.45 லட்சம் மதிப்பில் பளிங்குக் கற்களால் அழகிய நினைவிடம் ஒன்று கட்டியுள்ளனர். அவர்களது செயலுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால்–ஸ்ரீதேவி தம்பதியரின் மகன் வேத சாய் தத்தா, 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். ஒரே மகனின் மரணம் பெற்றோர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த வேதனையில் இருந்து மீள, மகனின் நினைவை நிலைநாட்டும் வகையில் கோவில் போன்று ஒரு நினைவிடம் கட்ட முடிவு செய்தனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கொருக்கொண்டா அருகே உள்ள கனுப்பூர் கிராமத்தில், விவசாய நிலத்தில் மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.45 லட்சம் செலவில் பளிங்குக் கற்களால் நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘வேத சாய் தத்த மந்திர்’ என பெயரிடப்பட்ட இந்த நினைவிடத்தைச் சுற்றி பூந்தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகனின் பெயரில் ‘ஓம்காரேஸ்வரர்’ என்ற அறக்கட்டளையும் தம்பதியர் தொடங்கி, ரூ.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மாதந்தோறும் 5 மற்றும் 19ஆம் தேதிகளில் அன்னதானமும் நடத்தப்படுகிறது.

மேலும் மகனை இழந்த துயரத்தை சேவைச் செயலாக மாற்றிய பெற்றோரின் இந்த முயற்சி, உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.