பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில், ரயில் பயணத்தின்போது அனாதைப் பெண் ஒருவரின் கஷ்டமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர், பின்னர் தன் குடும்பத்தின் முழு ஆதரவுடன் அவரையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, “இது அச்சு அசல் ஒரு திரைப்படத்தைப் போல் உள்ளது” என்று இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோலு யாதவ் என்ற அந்த இளைஞர், ரயில் பெட்டிக்குள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு சில பயணிகளால் மோசமான கருத்துக்கள் மற்றும் அநாகரிகமான பார்வைகளால் மன உளைச்சலும், பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்பட்டதை அங்குள்ள மற்ற பயணிகள் கவனித்துள்ளனர்.
உடனடியாகச் பெண்ணின் நிலைமையைப் புரிந்துகொண்ட கோலு யாதவ், அவரைப் பாதுகாக்க உடனடியாக தலையிட்டுள்ளார். குடும்ப ஆதரவின்றி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் அச்சிறுமியின் நிலையை உணர்ந்து, அவரைத் தன் பக்ஸரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார். வீட்டிற்குச் சென்றதும், கோலு யாதவ் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணின் சூழலைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் கஷ்டங்களைக் கேட்டு மனமிறங்கிய அவரது குடும்பத்தினர், அவருக்கு அடைக்கலம் கொடுக்கவும், பாதுகாப்பு வழங்கவும் சம்மதித்தனர். காலப்போக்கில், அந்தப் பெண் அந்தக் குடும்பத்தில் பழகிப்போன நிலையில், கோலு யாதவ் மற்றும் அவரது பெற்றோர் இருவரும் அவருடைய நலனில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், தனது குடும்பத்தின் சம்மதத்துடன் கோலு யாதவ் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.
இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் “அக்ஷய் குமார் இந்தப் படத்திற்கான கதையைப் பயன்படுத்துவார்”, “லாபதா லேடீஸ் 2 ஸ்கிரிப்ட் இதுதான்” என்று கருத்து தெரிவித்தனர். இந்தச் சம்பவம், அன்றாட வாழ்க்கையில் மனிதநேயம் மற்றும் அக்கறைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.
