ஸ்பெயினில் உள்ள அலிசாண்டேவில் (Alicante, Spain) இயங்கும் டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியர், தனது ஷிப்ட் தொடங்குவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்னதாகவே (காலை 7:30-க்கு பதிலாக 6:45 முதல் 7:00 மணிக்குள்) அலுவலகம் வந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முன்னதாகப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஊழியர், சீக்கிரம் அலுவலகம் வருவதை நிறுத்தாததால், ‘கடுமையான முறைகேடு’ (Serious Misconduct) செய்ததாகக் கூறி 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் அவரைப் பணியை விட்டு நீக்கியது.

சீக்கிரம் வருவதால் ஊழியர் அந்த நேரத்தில் நிறுவனத்திற்கு எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்றும், நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தியதாகவும் நிர்வாகம் கூறியது.

இந்த முடிவை எதிர்த்து அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, நீதிமன்றமும் நிறுவனத்தின் முடிவையேச் சரியென அறிவித்தது.

நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்தது, ‘முதலாளி-பணியாளர் உறவில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை’ (Trust and loyalty)ப் பாதிக்கும் ஒரு தீவிரமான முறைகேடு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.