கர்நாடக மாநிலம் பீதர் அருகே உள்ள ஜன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி ருத்வி, பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியபோது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டருகே பேருந்தில் இருந்து ருத்வி இறங்கத் தொடங்கியபோது, அவர் முழுவதுமாக இறங்குவதை ஓட்டுநர் கவனிக்காமல் பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி, பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.
உடனடியாக அங்கிருந்த பெற்றோரும் பொதுமக்களும் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனின்றி ருத்வி உயிரிழந்தார். ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நடந்தது எனப் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, விபத்திற்குக் காரணமான அந்தப் பேருந்து ஓட்டுநரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
