தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆலடியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் பல ஆண்டுகளாக துபாயில் மளிகைக் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்த தங்கராஜ், ஊரில் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் வந்து செல்வது வழக்கம்.
தற்போது ஆலடியூர் ஆற்றங்கரை தெருவில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அதனைப் பார்வையிட கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்திருந்தார். (டிச. 7) இரவில், கட்டப்பட்டு வரும் வீட்டினைப் பார்வையிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு ஏரல் – முக்காணி மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், தங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. நிரேஷ், ஏரல் இன்ஸ்பெக்டர் பத்மநாதபிள்ளை தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆலடியூரைச் சேர்ந்த மூக்காண்டி (68) என்பவரே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூக்காண்டியைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொலையாளி மூக்காண்டியின் மகன் கோட்டாளமுத்து (28) துபாயில் வேலை பார்த்துள்ளார். இவரை தங்கராஜ் தான் துபாய்க்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு, கோட்டாளமுத்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு துபாயில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வராமல் துபாயிலேயே அடக்கம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்கராஜ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த மூக்காண்டி, தனது மகனின் இறப்புக்கு தங்கராஜ் தான் காரணம் என எண்ணிப் பழிவாங்கும் நோக்குடன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து ஏரல் போலீஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
