சேலம், அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பாரதி. திருமணம் ஆகாத இவர், தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். இவருக்கும், சீலநாயக்கன்பட்டி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இருவரும் இரவு நேரத் திரைப்படத்திற்கு (நைட் ஷோ) சென்றுவிட்டு, நள்ளிரவில் பாரதியின் வீட்டிற்குத் திரும்பி வந்து ஒன்றாகத் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறிது நேரத்திலேயே பாரதி திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த உதயசரண், தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பாரதியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, உதயசரண் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் பாரதியின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாரதியின் மூக்கு மற்றும் நெஞ்சுப் பகுதியில் லேசான ரத்தக்காயங்கள் இருந்ததாகவும், அவர் மூச்சுத்திணறடிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உதயசரணைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உதயசரணுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கும் நிலையில், பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது தெரிய வந்தது. பாரதி, உதயசரணை தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.சம்பவத்தன்று இரவு, போதையில் வீட்டிற்கு வந்த இருவரும் தனிமையில் இருந்தபோது, பாரதி மீண்டும் திருமண வற்புறுத்தலில் ஈடுபட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த உதயசரண், பாரதியை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளி, பின்னர் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி மூச்சுத் திணறடித்து கொலை செய்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக, உதயசரணைக் கைது செய்த போலீசார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்
