தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் – சங்கரம்மாள் தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி (9-ம் வகுப்பு மாணவி) பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டபோது வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த கிருஷ்ணவேணிக்கு இதயப் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளையும் எடுத்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், மாணவி கிருஷ்ணவேணி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லச் சீருடை அணிந்து, புத்தகங்களை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மாணவியை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
