உலகின் முன்னணி வணிகப் பள்ளிகளில் ஒன்றான ‘இன்சீட்’ (INSEAD) பல்கலைக்கழகத்தில், தனது 20ஆவது வயதில் ரூ.40 லட்சம் கல்விக் கடன் பெற்று முதுகலை பட்டம் படித்துள்ளார் ஏக்தா அகர்வால் (22) என்ற இளம்பெண். வெளிநாட்டுப் படிப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெறுவது சரியா, இதற்கான பலன் கிடைக்குமா என்ற பொதுவான கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஏக்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கல்விக்கான பலனை வெறும் சம்பளத்தை வைத்து மட்டுமே கணக்கிடக் கூடாது.

 

View this post on Instagram

 

A post shared by Ekta Agrawal (@ekta.explains)

நல்ல பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலை வாய்ப்புகள் மூலம் கடனை அடைத்துவிடலாம். எனக்கு 33 நாடுகளில் நண்பர்கள் கிடைத்துள்ளனர்; உலகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை பட்டதாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. 40 வயதில் கூட கிடைக்காத அனுபவங்கள் எனக்கு 22 வயதிலேயே கிடைத்துவிட்டன. உங்களது தொடர்புகள் தான் உங்களது உண்மையான சொத்து என்று அவர் பேசியுள்ளார்.

ஏக்தாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது கருத்தை ஆதரித்து, “நல்ல உலகளாவிய தொடர்பு என்பது எதிர்காலத்திற்குப் பெரிய முதலீடு தான்” என்று பாராட்டியுள்ளனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர் இந்த வாதத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்குக் காபி வேண்டுமானால் வாங்கித் தருவார்கள், ஆனால் உங்களது மாதத் தவணையை (EMI) அவர்கள் கட்ட மாட்டார்கள்.

நீங்கள் இன்னும் நிஜ உலகக் கஷ்டங்களைப் பார்க்கவில்லை” என்றும், “இருபதுகளில் இப்படிப் பேசுவது குழந்தைத்தனமானது, முப்பதுகளில் தான் வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்” என்றும் ஏக்தாவிற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் கல்விக்கடன் மற்றும் அதன் மீதான லாபம் குறித்த விவாதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.