சென்னை மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகள் ஷாலினி ஸ்ரீ (6), தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த இந்தச் சிறுமி, நேற்று இரவு தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வேகமாக ஓடியபோது திடீரென கால் இடறி சாலையில் கீழே விழுந்துள்ளார்.

இதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு அச்சிறுமி மயங்கி விழுந்ததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சிறுமி வேகமாக ஓடியபோது கால் இடறி விழுந்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.