நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரைக் குறித்த அரசியல் ரீதியான விவாதங்களை இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் பலர் தங்கள் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விஜய்யின் தீவிர ரசிகர்கள், குறிப்பாக தவெக தொண்டர்களாக மாறியுள்ளவர்கள், அரசியல் புரிதலில் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதால், அவர்களை ஈர்க்கும் விதமாக பல இன்ப்ளூயன்சர்கள் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் மூலம், அவர்களுக்குப் பின் தொடருபவர்களின் (ஃபாலோயர்களின்) எண்ணிக்கை மிக வேகமாக உயர்கிறது. ஃபாலோயர்கள் அதிகரித்த பின், இந்த இன்ப்ளூயன்சர்கள் வழக்கம்போல் விளம்பர வீடியோக்கள் மற்றும் பிற தனிப்பட்ட திறமைகளை வெளியிட்டு அதன் மூலம் பணம் ஈட்டி வருகின்றனர்.

இது தவெக தொண்டர்கள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து விஜய் கட்சிப் பணிகளைத் தொடங்கி, விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குத் திட்டமிட்டிருந்தார். ஒரு சம்பவம் காரணமாக அவரது பயணங்கள் தற்காலிகமாக நின்றுபோன நிலையில், காஞ்சிபுரத்தில் உள் அரங்கு சந்திப்பை மட்டும் நடத்தினார்.

இதையடுத்து, டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியிலும், டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டிலும் பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறிவரும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் தவெக ஆதரவு வீடியோக்களை வெளியிட்டு தங்கள் சமூக ஊடகப் பக்கங்களை வளர்த்து வருவது பேசுபொருளாகி உள்ளது.