திருப்பதி உண்டியல் காணிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரவிக்குமார் என்பவர், தற்போது கண்ணீருடன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் ஒரு பெரிய ஜீயர் மடத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றியதாகவும், கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்றாவது ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி பரக்காமணியில் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது தவறை முழுமையாக உணர்ந்து கொண்டதால், தான் கேபிள் தொழிலும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்தச் சொத்தில் தொண்ணூறு சதவீதத்தை தேவஸ்தானத்திற்கு தனது குடும்பத்தினரின் சம்மதத்துடன் எழுதிக் கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார். தான் மிகப்பெரிய பாவம் செய்ததை நினைத்தும், அதனால் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்தும் கவலைப்படாத நாளே இல்லை என்று அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உண்மைக்குப் புறம்பாகத் திரித்துப் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் அவர் காணொலியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்டியல் காணிக்கை மோசடி விவகாரத்தில் ரவிக்குமார் தானாகவே முன்வந்து தனது சொத்துக்களைத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
