இந்தூரில் வசித்து வந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் நாக்தேவ் தனது மனைவியை கைவிட்டு, டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய ரகசியமாக திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நிகிதா, நீண்டகால விசாவில் இந்தியாவில் வசித்த விக்ரம் நாக்தேவுடன் 2020 ஜனவரி 26-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஒரு மாதம் கழித்து, பிப்ரவரி 26-ஆம் தேதி, விக்ரம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஜூலை 9, 2020 அன்று விசா தொடர்பான பிரச்சினைகளை முன்னிட்டு, விக்ரம் தன்னை அட்டாரி எல்லைக்கு கொண்டு சென்று வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டதாக நிகிதா புகார் செய்துள்ளார். அதன் பிறகு, தன்னை மீண்டும் அழைத்து வர எந்த முயற்சியும் விக்ரம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார். இதேவேளை, விக்ரமுக்கு இன்னொரு பெண்ணுடன் நெருங்கிய உறவு இருந்தது பற்றியும், அதை மாமியாரிடம் தெரிவித்தபோதும் அவர் மறுத்துவிட்டதாக நிகிதா தெரிவித்துள்ளார்.
पाकिस्तान की एक महिला ने पीएम मोदी से पति को पाकिस्तान डिपोर्ट कराने की गुहार, पांच मिनिट 13 सेकेण्ड के इस वीडियो में निकिता ने अपनी पूरी कहानी बयां की है और ये कहा है कि भारत में तो महिलाओं को इंसाफ मिलता है, उसे भी इंसाफ मिलना चाहिए.#Nikita | #ViralVideo pic.twitter.com/wd6KIw923Z
— NDTV India (@ndtvindia) December 6, 2025
மன உளைச்சலுக்கு ஆளான நிகிதா, கடந்த ஜனவரியில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்ற சிந்தி பஞ்ச் மத்தியஸ்தம் மற்றும் சட்ட ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டபோது, நிகிதாவும் தொடர்புடைய மற்றொரு பெண்மணியும் இந்திய குடிமக்கள் அல்லாததால், இந்த விவகாரம் பாகிஸ்தானின் அதிகார வரம்பிற்குள் வருவதாகவும், விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகவும், நிகிதா இந்தூர் பஞ்சாயத்தில் விக்ரம் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அப்போது கூட நாடு கடத்த பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் இரு நாடுகளின் சமூக, மகளிர் அமைப்புகள் மற்றும் சட்ட வட்டாரங்களின் கவனத்தை ஈர்க்கும் நிலையில், நிகிதா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “என்னை இந்தியாவுக்கு திரும்ப அழைக்கும்படி விக்ரமிடம் தொடர்ந்து கேட்டேன்.
ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், பெண்கள் அமைப்பின் மீது நம்பிக்கை குலையும். பல பெண்கள் தங்கள் வீட்டில் உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களை அனுபவிக்கின்றனர். அனைவரும் என்னுடன் நிற்க வேண்டும்” எனக் கோரியுள்ளார். மேலும், தனது கணவர் டெல்லியில் இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இதுகுறித்து தலையிட்டு நீதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு நிகிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
