சைபர் குற்றவாளிகள் இப்போது ‘வைரல் வீடியோ’ என்ற பெயரில் ஒரு புதிய மால்வேர் வைரஸை அனுப்ப முயற்சி செய்கின்றனர். வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தனிப்பட்ட மெசேஜிங் ஆப்கள் மூலம் 19 நிமிட போலியான வைரல் வீடியோவின் லிங்கை அனுப்பி, மக்கள் அதைக் கிளிக் செய்யத் தூண்டுகின்றனர்.

நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்யும்போது, உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் போனில் பேங்கிங் ட்ரோஜன் என்ற மால்வேர் நிறுவப்படுகிறது. இது உங்கள் பேங்கிங் லாக்இன் விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. போன்ற தனிப்பட்ட தரவுகளை ரகசியமாகத் திருடி, உங்கள் வங்கி கணக்குகளைக் காலி செய்துவிடுகிறது. சில நேரங்களில், லிங்கை கிளிக் செய்தவுடன் ஸ்கிரீன் காலியாகிவிடும் அல்லது அசல் லாக்இன் ஸ்கிரீன் போன்ற ஒரு போலி லாக்இன் ஸ்கிரீன் தோன்றும்.

அதில் நீங்கள் விவரங்களை உள்ளிடும்போது, சைபர் குற்றவாளிகள் அவற்றைத் திருடிவிடுகின்றனர். எனவே, அறிமுகம் இல்லாதவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் அனுப்பும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் போன் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.