இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் விதிக்கும் விநோத கட்டுப்பாடுகள் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ள கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டில் இரவு நேரத்தில் இரண்டு தோழிகளை தங்க வைத்ததற்காக குடியிருப்பு நலச்சங்கத்தினர் அவருக்கு ₹5,000 அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து ரெடிட் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அந்த மாணவர், “நான் ஒரு ஆண் என்பதால் என்னுடன் எனது தோழிகளை இரவில் தங்க வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
ஆனால், குடும்பமாக வசிப்பவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. வீட்டுப் பராமரிப்புக் கட்டணம் உட்பட அனைத்தையும் நானே செலுத்தும் நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அபராதம் விதிப்பது எந்த நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தப் பதிவுடன் அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் இணைத்து அவர் வெளியிட்டுள்ள நிலையில், இது இணையத்தில் உடனடியாக வைரலானது. “இது ஒரு சிறிய விஷயம், இவ்வளவு மோசமாக நடத்துவது சரியல்ல. எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை, ஆனால் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய முடியுமா என்று தெரியவில்லை” என்றும் அந்த மாணவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகச் சங்கங்கள் கூறினாலும், பாலினத்தின் அடிப்படையில் விதிகளை உருவாக்குவது சரியல்ல எனப் பல நெட்டிசன்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றனர்.
