நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதாவது, அவர் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், ஆளும் கட்சியான திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவையோ, அதன் கூட்டணி கட்சியான அதிமுகவையோ விமர்சிப்பது இல்லை என்பதாகும். இதனால், அவர் பாஜகவின் ‘சி’ டீம் என்றும், அவரது மௌனம் பாஜகவுக்கு ஆதரவான மனநிலை என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் குறித்து, தவெகவில் புதிதாக இணைந்த நிர்வாகி நாஞ்சில் சம்பத் அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர், “பாஜக கொள்கை எதிரி என்பதில் விஜய் பின்வாங்கவில்லை. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது, அவர், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இப்போது அதிகாரத்தில் இருக்கும் கட்சி திமுக. இங்கு தேர்தல் நடக்க இருப்பதால், திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன்.
பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார். திமுகவையும், பாஜகவையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் விஜய்யின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். மேலும், நாஞ்சில் சம்பத், தான் பிரச்சாரம் செய்து வாழ்பவர் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
