திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது முதல் கணவருக்குத் தெரியாமல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாமக்கல் இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப் பெண், தனது 15 வயது மகள் மற்றும் 13 வயது மகனைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு, தான் திருமணமாகாத 30 வயதுப் பெண் என்று கூறி நாமக்கல் இளைஞரை ஏமாற்றிக் காதலித்து, நவம்பர் 30-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணப் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், அந்தப் பெண்ணின் முதல் கணவர் அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் தனது குழந்தைகளுடன் பாண்டமங்கலத்தில் உள்ள இரண்டாவது கணவர் வீட்டிற்குச் சென்று, மனைவியைத் தாக்கினார். அப்போதுதான், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவேத் திருமணமாகிவிட்டதும், அவருடன் வந்தவர்கள் முதல் கணவர் மற்றும் குழந்தைகள் என்பதும் இரண்டாவது கணவர் குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது.
தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலிச் செயினைப் பெற்றுக் கொண்ட இரண்டாவது கணவர், இதுவரை ₹5 லட்சம் செலவு செய்து ஏமாந்து விட்டதால், இனி அந்தப் பெண் தனக்கு வேண்டாம் என்று கூறிச் சென்றார்.
முதல் கணவரும் குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப் பெண் தனக்கு வேண்டாம் என்று கூறிச் சென்றுவிட்டார். ஆசையின் காரணமாகத் தவறு செய்த அந்தப் பெண், இரு கணவர்களையும் இழந்து, குழந்தைகளுடன் நின்றதைக் கண்ட போலீசார், அவரை எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
