மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்ற வாலிபர், தான் வாங்கிய புதிய வீட்டை தனது பெற்றோருக்கு சர்ப்ரைஸ் ஆகப் பரிசளித்துள்ளார். இந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தை அவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. வாடகை வீடு என்று நினைத்து உள்ளே சென்ற அவரது பெற்றோர், சில நொடிகளிலேயே அந்த வீடு தங்களுடையது என்று அறிந்தபோது வெளிப்படுத்திய உண்மையான, நெகிழ்ச்சியான உணர்வுகளை இந்த வீடியோ படம்பிடித்துக் காட்டியுள்ளது.
View this post on Instagram
சொத்து ஆவணங்கள் மற்றும் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை அவர்களிடம் கொடுத்து ஆஷிஷ் ஜெயின் உண்மையை வெளிப்படுத்தினார். புதிய வீட்டில் நின்றிருந்த ஆஷிஷ் ஜெயின், அந்த வீட்டைப் பரிசாக வாங்கிய உண்மையை வெளியிட்டபோது, அவரது பெற்றோர் இருவரும் முதலில் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். பிறகு, தந்தை ஆஷிஷை இறுக அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, மகிழ்ச்சி தாங்காமல் உற்சாகத்துடன் நடனமாடினார்.
தாயார் முதலில் மௌனமாக திகைத்து நின்றாலும், மெல்ல மெல்ல செய்தியைப் புரிந்து கொண்டு, கண்ணீர் விட்டு அழுதபடி மகனை அணைத்துக்கொண்டார். அப்போது, ஆஷிஷ் ஜெயின் சாஃப்ட்டாகச் சொன்ன “இந்த வீடு உங்களுடையது” என்ற வரி, இந்த கிளிப்பின் உணர்ச்சிமயமான உச்சமாக அமைந்தது. “அவர்களின் மகிழ்ச்சிதான் அனைத்தையும் விடப் பெரியது” என்று ஆஷிஷ் ஜெயின் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆஷிஷின் அன்பான செயலைப் பாராட்டி வருகின்றனர்.
