உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் 5 நாட்களுக்கு முன்பு மொஹ்சின் என்ற மணமகனுக்குத் திருமணம் நடந்தது. திருமண இரவில், மணமகளுக்காக அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சென்ற மொஹ்சின், அங்கு விளக்கு வெளிச்சம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அதை மாற்றிவிட்டு வருவதாகச் சொல்லி வெளியேறியவர், அதன்பின்னர் திரும்பி வரவில்லை. மணமகள் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் காத்திருந்த நிலையில், அவர் எங்கு சென்றார் எனத் தெரியாமல் பதற்றமும் அச்சமும் தொற்றிக்கொண்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் கங்கை கால்வாய் அருகே காணப்பட்டதால், அவர் கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அதிகாரிகள் பிஏசி நீச்சல் வீரர்களை வரவழைத்துத் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இதனால், குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மொஹ்சின் காணாமல் போன அடுத்த நாள், அவரது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவர் இல்லாத சூழலில் மிகுந்த கவலையுடன் அந்தத் திருமணங்களும் நடந்தன.

அனைவரும் மோசமானதையே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திங்கட்கிழமை அன்று மொஹ்சின் உறவினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் ஹரித்வாரில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறை உதவியுடன் ஹரித்வார் சென்று, மொஹ்சினைப் பத்திரமாக மீட்டு வந்தனர்.

விசாரணையில், மணமகளின் முன்னால் இருந்தபோது ஏற்பட்ட அதீத மன அழுத்தமும், கவலையும் காரணமாக, யாரிடமும் சொல்லாமல் நடந்தே ஹரித்வார் சென்றதாக மொஹ்சின் விளக்கமளித்துள்ளார். பல நாட்களாக நீடித்த பயத்தையும் பதற்றத்தையும் அவரது பத்திரமான வருகை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதையடுத்து, போலீசார் மொஹ்சினை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.