பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் அமைந்துள்ள ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளில், மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஒருவர், ஆர்வ மிகுதியின் காரணமாக, விலங்குகளை அடைத்து வைத்திருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி உள்ளே சென்றார்.
பின்னர், அங்கிருந்த ஒரு மரம் வழியாகக் கீழே இறங்க முயன்றபோது, அங்கிருந்த ஒரு சிங்கம் அவரைப் பாய்ந்து தாக்கி, இழுத்துச் சென்றது. இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மச்சாடோ, துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழப்பு ஏற்பட்ட ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவின் விதிகளை மீறி, வாலிபர் தடுப்புச் சுவரைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதன் பின்னணி என்ன என்பது குறித்தும், இந்தச் சம்பவம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விபரீதச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பார்வையாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
