ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தடிப்பல்லி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் மதுரி சஹிதிபாய்(வயது 27) என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரி சஹிதிபாய், நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரைக் காதலித்து, கடந்த மார்ச் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே, கணவர் ராஜேஷ் மதுரியிடம் வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான மதுரி, கடந்த அக்டோபர் மாதம் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கணவர் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமையில் ஈடுபட்டதாலும், அவர் தன்னைக் காதலிக்கவில்லை என்ற மனவேதனையிலும், மீண்டும் அழைத்துச் செல்ல வராததாலும் மதுரி இன்று தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார், மதுரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியின் மகளே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
