இமாசலப் பிரதேசத்தின் ரோரா பள்ளத்தாக்கின் இணையற்ற அழகிய காட்சிகளைத் தன்னகத்தே கொண்ட யுல்லா கண்டா ஏரி, உலகிலேயே மிக உயரமான கிருஷ்ணர் கோயிலுக்கு இருப்பிடமாகத் திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3,895 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் சமீபத்திய காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முழுமையாகப் பனிப் போர்வையில் போர்த்தப்பட்டிருக்கும் ஆலயத்தின் தோற்றத்தை அக்காணொலி படம்பிடித்துள்ளது. ஆலயத்தின் கல் சுவர்களும், கொடிகளும் வெள்ளைப் பனியால் கிட்டத்தட்ட மறைந்துபோகும் நிலையில், பள்ளத்தாக்கு முழுவதும் வெண்மையாகப் பளிச்சிடும் காட்சி பார்வையாளர்களைப் பரவசமடையச் செய்துள்ளது.
யுல்லா காஸ் கிராமத்தில் தொடங்கும் சுமார் 12 கி.மீ தூரமுள்ள கடினமான மலையேற்றப் பயணம், வண்ணமயமான காட்டுப் பூக்கள் பூத்த பாதைகள், பசுமையான புல்வெளிகள், அமைதியான நீர்வீழ்ச்சிகளைக் கடந்து, கின்னார் மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
யுல்லா கண்டா ஏரி பற்றிய பல புராணக் கதைகளும் உலாவுகின்றன. மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது இந்த ஏரியை உருவாக்கியதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ஆல்பைன் ஏரியில் ஒருமுறை நீராடினால், மனதையும் உடலையும் பிடித்திருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்களும் நீங்கிவிடும் என்று தீவிரமாக நம்பப்படுகிறது.
பீரான் காட்டி, லிஸ்டிகாரங் கணவாய், காஷாங் கணவாய் போன்ற சவாலான பாதைகளைக் கடந்து செல்லும் இந்தப் பயணம், எளிமையான கோயில் அமைப்பை அடைய உதவுகிறது. ஜன்மாஷ்டமி அன்று இங்கு நடைபெறும் திருவிழாவிற்காக, கல்பாவிலிருந்தும் பாங்கி கிராமத்திலிருந்தும் பக்தர்கள் காஷாங் கணவாய் வழியாகப் பயணம் மேற்கொள்கின்றனர்.
கோயிலில் வழிபாடு செய்தபின், பக்தர்கள் ஏரிக்கருகே கூடாரம் அமைத்து இரவைக் கழிக்கலாம் அல்லது ரோரா கண்டாவை நோக்கி மலையேற்றத்தைத் தொடரலாம். பனிக்கால மலையேற்றம் வல்லுநர்களுக்கு மட்டுமே உகந்தது என்றாலும், மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் அனைவரும் தரிசிக்கச் செல்ல சிறந்த காலமாக பரிந்துரைக்கப்படுகிறது.
