இசையமைப்பாளர் ஜிப்ரானின் அழைப்பின் பேரில், பாடகி சின்மயி மோகன் ஜி-யின் ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் “எம்கோனே…” என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் வெளியானதும், பெண்ணியம் பேசும் சின்மயி சாதியவாதம் பேசும் இயக்குநரின் படத்தில் பணியாற்றுவதா என்று சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதன் காரணமாக, சின்மயி தான் பாடல் பாடியதற்காக மன்னிப்புக் கோரினார். முன்பே சூழல் தெரிந்திருந்தால் பாடியிருக்க மாட்டேன் என்றும், தனது கொள்கைக்கு மோகன் ஜி-யின் கருத்துகளுக்கு முரண்கள் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் மோகன் ஜி, “எம்கோனே…” பாடலுக்கு சின்மயி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு ஜிப்ரானை அணுகியதே தாம் தான் எனக் குறிப்பிட்டார். சின்மயின் மன்னிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், யாரின் அழுத்தத்தால் மன்னிப்பு கோரினார் என்பதை விளக்கினால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படாது என்றும், தனது பதிவை நீக்க வேண்டும் என்றும் மோகன் ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், படத்தில் பணியாற்றும் கலைஞர்களை குறிவைக்க வேண்டாம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.