பாமக தலைவர் பதவி தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த கருத்து மோதல் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இரு தரப்பினரும் பல முறை இந்திய தேர்தல் கமிஷனில் புகார் மனுக்கள் அளித்து வந்த நிலையில், தேர்தல் கமிஷன் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், “டாக்டர் அன்புமணி ராமதாசின் தலைவர் பதவிக்காலம் 28.05.2025 அன்று முடிவடைந்ததாகவும், புதிய தலைவராக டாக்டர் எஸ். ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பல கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 01.08.2026 வரை செல்லுபடியாகும். மேலும், தற்போதும் டாக்டர் அன்புமணிதான் கட்சியின் தலைவராக பதவியில்ல் உள்ளார். நீங்கள் தலைவர் எனக் கூறினால், கட்சித் தலைமை தொடர்பான இந்த பிரச்சினையை, பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தையே அணுக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், பா.ம.க. தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் ராமதாஸ் ஆதரித்து வரும் தரப்பில் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி நிலவுகிறது. இதையடுத்து, கவுரவ தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனை சந்தித்து புதிய புகாரை அளித்தனர். பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஜி.கே. மணி, “அன்புமணி ராமதாஸ் போலி ஆவணங்களை வைத்து தேர்தல் கமிஷனை தவறாக நம்ப வைத்துள்ளார். அந்த ஆவணத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் எடுத்த தீர்மானம் ஜனநாயகத்திற்கே எதிரானது. இது ‘ஜனநாயக படுகொலை’. இதை கட்சியை திருடும் முயற்சியாகவே பார்க்கிறோம்.
தேர்தல் கமிஷன் ஜனநாயகத்தை காக்க வேண்டிய அமைப்பு. ஆனால் எங்களை கோர்ட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருப்பது கவலைக்குரியது. இதை கண்டித்து, சென்னையிலிருந்து தொண்டர்களை அழைத்து வந்து, தேர்தல் கமிஷன் முன் வலுவான போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்துள்ளார். மேலும் இதன்மூலம், பா.ம.க. தலைவர் விவகாரம் மேலும் தீவிரமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
