திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதனால் இளஞ்சியம் தன் கணவரைப் பிரிந்து, தன் மூன்று மகன்களுடன் தங்கபாண்டியனுடன் சேர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்குச் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தார். இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25), திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணிபுரிந்த நாகை மாவட்டம் கூரத்தாங்குடியைச் சேர்ந்த சினேகா (23) என்பவரைக் காதலித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், குடும்பத் தகராறு காரணமாக அரவிந்தராஜ் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
அரவிந்தராஜின் முதலாமாண்டு நினைவு தினம் கடந்த 13ஆம் தேதி முடிந்த நிலையில், இளஞ்சியம், தங்கபாண்டியன் மற்றும் மருமகள் சினேகா, அவரது குழந்தை ஆகிய நால்வரும் கடந்த 18ஆம் தேதி சொந்த ஊரான எடமேலையூருக்கு வந்தனர். கடந்த 21ஆம் தேதி சினேகாவை அவரது தாய் தமிழ்ச்செல்வி செல்போனில் அழைத்தபோது, சினேகா பதிலளிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வி, விசாரித்ததில் சினேகா எடமேலையூருக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்ச்செல்வி மன்னார்குடி டவுன் காவல் நிலையத்தில் 21ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனிடம் விசாரித்தனர்.
விசாரணையில், கணவர் இறந்த பிறகு சினேகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும், அவர் தனிக் குடித்தனம் செல்ல விரும்புவதாகவும் கூறி வந்ததால், மன்னார்குடியில் வைத்து சினேகாவைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் தங்கபாண்டியன் ஒப்புக்கொண்டார்.
திட்டமிட்டபடி, இளஞ்சியத்துடன் சேர்ந்து சினேகாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை பெரியாறு வாய்க்காலில் வீசியது தெரியவந்தது.இதில் இளஞ்சியத்தை முன்பே சோனாப்பேட்டைக்கு அனுப்பி வைத்த தங்கபாண்டியன், சினேகாவை பைக்கில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் தேடியபோது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் சினேகாவின் உடல் சேற்றில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
