ஜப்பானைச் சேர்ந்த ‘எஸ்’ என்ற 66 வயது முதியவர், தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பணக்காரராகி விட வேண்டும் என்ற கனவில் தொடர்ந்து லாட்டரிச் சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். பெரும் உற்பத்தி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவருக்கு, மாதாந்திர பென்ஷனாகச் சுமாரான தொகையே கிடைத்து வந்த நிலையில், திடீரென அவருக்கு சுமார் 600 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.8 கோடி) லாட்டரி பரிசாக விழுந்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையைக் கண்டு வியந்த முதியவர், மிகுந்த சிக்கனவாதியான தனது மனைவிக்கு இதுபற்றித் தெரியவந்தால், சுதந்திரமாகச் செலவு செய்ய முடியாது எனக் கருதி, லாட்டரிப் பரிசை மறைக்க முடிவு செய்தார். தான் வெறும் 32 ஆயிரம் டாலர் மட்டுமே வென்றதாகவும், அதைக்கொண்டு வீட்டைச் சீரமைக்கப் போவதாகவும் மனைவியிடம் பொய் சொல்லி உள்ளார். உண்மையாகவோ, அந்த லாட்டரிப் பணத்தில் ஒரு சொகுசு கார் வாங்கி, ஆடம்பரமான ரிசார்ட்களில் அறை முன்பதிவு செய்து, நாடு முழுவதும் ரகசியமாகச் சுற்றுலா சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

ஆறு மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த நிலையிலும், மனைவியிடம் உண்மை மறைக்கப்பட்டு வாழும் இந்த ஆடம்பர வாழ்க்கை அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. குற்ற உணர்ச்சியும், தனிமையும் அவரை வாட்டியது.

ஒரு கட்டத்தில், தனது தந்தை பணமின்றி தனிமையில் மரணமடைந்த நிகழ்வு நினைவுக்கு வந்ததால், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். உடனடியாக நிதி ஆலோசகரை அணுகி, லாட்டரியில் வென்ற மீதிப் பணம் முழுவதையும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பயனாளிகளாகக் குறிப்பிட்டு காப்பீட்டில் முதலீடு செய்தார்.

“இந்தச் செல்வம் எனது சொந்த உழைப்பால் கிடைத்திருந்தால் பெருமை அடைந்திருப்பேன். ஆனால், முயற்சியின்றி கிடைத்த இந்தப் பணம் எனக்கு மகிழ்ச்சியான நினைவுகளைத் தரவில்லை,” என்று எஸ் தெரிவித்துள்ளார். லாட்டரியில் கிடைத்த பெரும் தொகையை மனைவியிடம் மறைத்து உல்லாசம் அனுபவிக்க நினைத்த முதியவர், இறுதியில் மனம் திருந்தி, குடும்பத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தது பல நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.